Sunday, May 21, 2017

சோளம் சாத்வீக இட்லி

சோளம் சாத்வீக இட்லி
சோளம் சாத்வீக இட்லி

தேவையான பொருட்கள் - 10 முதல் 12 இட்லி தயாரிக்க:

மாவு தயாரிப்பதற்கு:

  1. சோளம் – 1 குவளை (150 கிராம்)
  2. சோள அரிசி – 1/4 குவளை (50 கிராம்)
  3. வெண்டைக்காய் – 1 குவளை (150 கிராம்)
  4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி


மாவுடன் கலப்பதற்கு:

  1. முளைவிட்ட பாசிப்பயறு அல்லது நிலக்கடலை – 3 தேக்கரண்டி
  2. கேரட் துருவல் – 3 தேக்கரண்டி
  3. முட்டைக்கோஸ் நறுக்கியது - 3 தேக்கரண்டி
  4. இந்துப்பு – சுவைக்கேற்ப



செய்முறை:

  1. முழு சோளம் மற்றும் வெந்தயம் இவை இரண்டையும் முதல் நாள் இரவே (குறைந்தது  6 மணிநேரம்) ஊறவைக்கவும்.
  2. மறுநாள் காலையில் ஊறிய சோளத்தை ஓரிரு முறை அலசிக் களைந்து விட்டு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டரில்) சிறிது நீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  3. இதற்கிடையில் வெண்டைக்காயை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து, அதனையும் ஆட்டுக்கல்லில் மாவுடன் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். மாவை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்க்க வேண்டாம்.
  4. சோள அரிசியை தனியாக காய்ந்த மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பொடித்த வைத்த சோள அரிசி மாவை, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.
  6. 4 மணி நேரம் கழித்து இந்த மாவுடன், முளைவிட்ட பாசிப்பயறு/ நிலக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், இந்துப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இட்லி ஊற்றும் பதத்திற்கு ஏற்றவாறு, தேவைப்பட்டால் தண்ணீர் கலக்கவும்.
  7. இட்லி பாத்திரத்தில் வேக வைத்து, சாப்பிடவும். 


குறிப்பு:

  • இயற்கை வாழ்வியல் முகாமில் கற்றுக் கொண்ட இந்த செய்முறையை, நான் சற்று மாற்றி செய்திருக்கின்றேன்.
  • சோள அரிசி பொதுவாக அனைத்து இயற்கை அங்காடிகளிலும் கிடைக்கும். ஒருவேளை உங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை எனில்,  சோள அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்தவும்.
  • கேரட், முட்டைக்கோஸ் போன்ற காய்களுக்கு பதிலாக, சௌசௌ மற்றும் பீன்ஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான, வேறு ஏதாவது இரண்டு வகையான காய்கள் உபயோகிக்கலாம்.
  • வெண்டைக்காய்க்கு பதிலாக வெண்பூசணிக்காயைப் பயன்படுத்திச் செய்த சாத்வீக இட்லி செய்முறையை இங்குக் காணலாம்.
  • அதுபோலவே, ராகியில் செய்த  சாத்வீக இட்லி செய்முறையை இங்குக் காணலாம்.

No comments :

Post a Comment