Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Tuesday, December 8, 2015

இயற்கை வாழ்வியலில் எங்கள் இரண்டரை வருட அனுபவங்கள்


நாங்கள் இயற்கை வாழ்வியல் முறையைப் பின்பற்ற ஆரம்பித்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இரண்டரை வருடங்களில் எங்களுடைய உடல் நலத்தில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றம், எங்களைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து நாங்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் கேள்விகள், நாங்கள் சமுதாயத்தில் கவனித்த ஒரு சில விசயங்கள், அவை குறித்த எங்கள் எண்ண ஓட்டங்கள், ஆகியவை குறித்த ஒரு வலைப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த சில மாதங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இத்தனை நாட்களும், இதை எதிலிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். நாங்கள் சமீபத்தில் தொலைக்காட்சியில், ஒரு மருத்துவர் குழு, மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியைக் கண்ட பிறகு, எங்கள் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது தான் சரியான நேரம் எனத் தோன்றியது.


மருத்துவர்களின் நோய் குறித்த அறியாமை:

அந்தக் கலந்துரையாடலின் போது (http://www.hotstar.com/1000072205 time: 38:00) ஒரு மருத்துவர், ‘முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இயற்கையாகவே வரக்கூடிய நோய்கள்’ என்று சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.  இதைக் கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். சில வருடங்களுக்கு முன்பு வரை, இதே நவீன மருத்துவ உலகம், இத்தகைய நோய்களை எல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்று வகைப்படுத்தி இருந்தது. பின்னர் அது ஐம்பது வயதாக மாறியது.  ஒரு சில வருடங்களுக்கு முன்பு, அது நாற்பதாகக் குறைந்தது. ஆனால், தற்சமயம் அதே மருத்துவர்கள், இந்த நோய்களை, முப்பது வயதானவர்களுக்கு, அதுவும் ‘இயற்கையாகவே வரக்கூடியது’ என்று கூறியதைப் பார்க்கும் பொழுது, மருத்துவர்களே, நோய்கள் குறித்த அறியாமையில் இருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்குகிறது. இந்நிலையில் இவர்களால் நோயாளிகளுக்கு எப்படி சரியான ஆலோசனைகளை அளிக்க முடியும்? ஒருவேளை இவற்றை நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி, நோய்களாகவே ஏற்றுக்கொண்டாலும், இத்தனை வருடங்களில் அவற்றை முற்றிலும் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? நோயாளிகளின் வயதுவரம்பு குறைந்து கொண்டும், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது. 

ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்களும், வாராந்திர, மாத இதழ்களும், மருத்துவ நிபுணர்களை வைத்து, அவ்வப்போது மக்களுக்கு வருமுன் காப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதில் பிரச்சினை என்னவென்றால், வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், ‘மாரடைப்பு வராமல் எப்படித் தடுப்பது?’, ‘சர்க்கரை நோய் வராதிருக்க என்ன வழி?’, ‘உடல் எடை குறைக்க என்ன வழி?’, ‘குழந்தைகளுக்கு எது ஊட்டச்சத்து தரும் உணவு?’, ‘பெண்களுக்கு எது ஊட்டச்சத்து தரும் உணவு?’, ‘கோடைகாலத்தில் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை எப்படிச் சமாளிப்பது?’, என்று அவரவர் துறை சார்ந்த நோய்களுக்கு மட்டும் ஆலோசனைகளைத் தருகிறார்கள். 

நவீன மருத்துவம், மனிதனின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்றவாறு, மருத்துவத்துறையைத் தனித்தனியாகப் பிரித்து நிபுணர்களை உருவாக்கியுள்ளது. அது மனிதனின் ஆரோக்கியத்தை முழு உடலுக்கானதாகப் பார்ப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு உறுப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இயற்கை வாழ்வியல், இந்த அடிப்படைத் தத்துவத்தின் படி அமைந்துள்ளது. அதனால் தான், ஏற்கனவே பல்வேறு வியாதிகளால் அவதிப்படுபவர்களுக்கு, அவற்றிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளும் ‘நோய் ஒன்றே; சிகிச்சையும் ஒன்றே*’ எனும் கோட்பாட்டின் படி அமைந்துள்ளது. அதுபோலவே, இங்குப் பலவிதமான நோயாளிகளுக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஒன்றுதான். இது நாங்கள் இருவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை. ஏனெனில் எங்கள் இருவருக்கும், பணிமனைக்கு முன்பு வரை, வெவ்வேறு உறுப்புகள் சார்ந்த நோய்கள் இருந்தன.  நாங்கள் அதுவரை மேற்கொண்ட அனைத்து விதமான சிகிச்சை முறைகளும், இருவருக்கும் தனித்தனியான மருந்துகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் பரிந்துரைத்தது. இந்தப் பணிமனைக்கு வந்த நாளிலிருந்து, இங்குக் கற்றுக்கொண்ட பாடத்தின்படி, ஒரே விதமான உணவு முறைகளையும், சிகிச்சை முறைகளையும் பின்பற்றி வந்தோம். ஆச்சரியப்படும் விதமாக, சில மாதங்களிலேயே அவ்வெவ்வேறு விதமான நோய்களிலிருந்தும் மீண்டு விட்டோம். ஆரோக்கியத்தை அடைந்த பின்னும், அதே உணவு முறைகளையே பின்பற்றி வருகிறோம். இப்போது நாங்கள் நினைத்துப் பார்ப்பது என்னவென்றால், இந்த நிபுணர்கள் கூறுவது போல, ஒரு குடும்பத்தில் வெவ்வேறு நோயாளிகள் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான உணவுகளை சமைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியமான குடும்பத்திலும் கூட, குழந்தைகளுக்கு ஒருவகை, வயதானவர்களுக்கு ஒருவகை, நடுத்தர வயதுடைய பெண்ணுக்கு ஒருவகை, ஆணுக்கு ஒருவகை என்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஊட்டச்சத்து தரும் உணவை சமைப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை.

(* இங்கு நோய் என்பது யாதெனில், உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விட்ட கழிவு வண்டல்களே ஆகும். அவ்வாறு தங்கி விட்ட கழிவுகளை வெளியேற்றும் முறைகளே சிகிச்சை ஆகும்.)

தற்பொழுது வழக்கத்தில் இருக்கும் அனைத்து வகை மருத்துவ முறைகளும், நோய்க்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து, அவற்றைக் களைவதில்லை. மாறாக அவை, நோய்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே சிகிச்சை செய்கின்றன. தீவிர நோய்கள் என்று சொல்லப்படும் காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் தலைவலி ஆகிய ஐந்தும், உயிராற்றலால் தோற்றுவிக்கப்படும் நோய்கள். இந்நோய்கள், உடலில் தேங்கிவிட்டக் கழிவுப்பொருட்களை, அசாதாரணமான முறையில் வெளியேற்றி, உடலைக் ‘குணப்படுத்தும் நோய்களாகும்’. இந்த ஐந்து நோய்களும் ஏற்படுவதற்கான உண்மையானக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல், அனைத்து மருத்துவ முறைகளும், சிகிச்சை எனும் பெயரில், உயிராற்றலின் உன்னதப் பணியைத் தடைசெய்கின்றன. அதிலும் குறிப்பாக அலோபதி மருத்துவம் இரசாயங்களாலான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. அத்தகைய மருந்துகள் செரிமானம் ஆகாமல் உடலில் தங்கி, ஏற்கனவே உடலில் தேங்கிவிட்டக் கழிவுகளுடன் சேர்ந்து, புற்றுநோய் உள்ளிட்ட மற்ற அனைத்து வகையான மந்த நோய்களுக்கும் வித்திடுகின்றன. இயற்கை வாழ்வியல், இந்த ஐந்து விதமான ‘குணப்படுத்தும் நோய்களை’, உயிராற்றலின் பணிக்கு எவ்வித இடையூறும் இன்றி, அதனுடன் இயைந்து ஆரோக்கியத்தை எளிதில் மேம்படுத்திக் கொள்ளும் இயற்கையான வழிமுறைகளைக் கற்றுத்தருகிறது. 

நாங்கள் பல இடங்களில் நவீன மருத்துவம் குறித்துக் கடிந்து பேசுவதாக உங்களில் பலர் நினைக்கலாம். உண்மையில் அதே மருத்துவத்துறையில் உயர்ந்த பதவிகளில் இருந்த ஒரு சில மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் (உதாரணமாக, Sir Robert McCarrison, Sir William Osler, Antoine Béchamp, Henry Lindlahr, Max Joseph von Pettenkofer), தங்களது பல வருட அனுபவத்திற்குப் பிறகு, அத்துறையில் இருக்கும் பல்வேறு குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் மருத்துவம் எனும் உயரிய சேவையை, அதிக லாபம் தரும் வியாபாரமாக எண்ணத் தொடங்கிய பெருவணிக நிறுவனங்கள், அவர்களின் கருத்துக்களை முற்றிலுமாகப் புறக்கணித்தும், மறைத்தும் விட்டன. எங்களுக்கு சமீபத்தில் நவீன மருத்துவத்தைச் சார்ந்த மருத்துவர் பி.எம். ஹெக்டே அவர்கள், மருத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரைப் போன்ற மருத்துவ வல்லுனர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மிகவும் போற்றுதற்குரியது. அவருடைய காணொளிகளை நீங்களும் அவசியம் பாருங்கள். 

ஒரு சில இயற்கை மருத்துவ நிபுணர்கள், எலும்பு முறிவு மற்றும் விஷக்கடிகளையும் கூட குணப்படுத்தியுள்ளனர். ஆனால், நாங்கள் அறிந்தவரை இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாளும் வல்லுனர்கள் தற்சமயம் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை. எனவே இதுபோன்ற சூழ்நிலைகள் மற்றும் விபத்துக்காலங்களில் மட்டும் அலோபதி மருத்துவத்தைப் பயன்படுத்தலாம் என்பது எங்கள் கருத்து.


நோய் என்ற ஒன்று உலகில் இல்லை:

இயற்கை வாழ்வியலின் தாரக மந்திரம், ‘நோய் என்ற ஒன்று உலகில் இல்லை’ என்பது. இதை நாங்கள் பணிமனைத் துவங்கிய நாளில் நம்பவில்லை. ஆனால் பணிமனையின் ஏழாம் நாள், வகுப்புகள் நிறைவுற்ற பிறகு, சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி ‘நோய் என்ற ஒன்று உலகில் இல்லை’ என்பதை மனமார உணர்ந்து, ஒப்புக் கொண்டோம். நாங்கள் அறிந்த வரை, இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில், பல இடங்களில் இயற்கை மருத்துவ முகாம்களும், இயற்கை மருத்துவமனைகளும், வெவ்வேறு நிபுணர்களால், வெவ்வேறு விதமாக நடத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் மக்களுக்குப் பரிந்துரைக்கும் உணவு முறையும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சில நிபுணர்களும், இயற்கை அங்காடிகளும் நோய்களுக்கான நிவாரணி என்று கூறி, சில இயற்கை மருந்துகளையும் விற்பனை செய்கின்றனர். எப்போது இந்த இயற்கை மருத்துவ நிபுணர்கள், ‘உலகில் நோய் என்ற ஒன்று இல்லை’ என்பதைத் தாங்கள் முதலில் உணர்ந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைக்கின்றார்களோ, அப்போது தான் சமுதாயத்தில் ஆரோக்கிய வாழ்க்கைக்கான முதற்படி ஆரம்பிக்கும். நாங்கள் பங்குபெற்ற இயற்கை வாழ்வியல் பணிமனையின் ஆசான், திரு. பாலகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு இருக்கும் நோய்கள் குறித்த தெளிவானப் பார்வையினாலேயே, இந்தப் பணிமனை மற்ற இடங்களில் நடக்கும் ‘இயற்கை மருத்துவ முகாம்’ என்ற பெயர் இல்லாமல், ‘இயற்கை வாழ்வியல் முகாம்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.


தேவை வாழ்வியல் மாற்றம்:

பஞ்சபூதங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த உடல், எப்பொழுதும் அவற்றைச் சார்ந்தே இயங்குகிறது. இவ்விதியானது, இப்பூவுலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். ஆனால் மிகவும் விந்தையாக, அனைத்து உயிரினங்களிலும் மேன்மையானவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் மனிதர்களாகிய நம்மிடம் தான் கிட்டத்தட்ட 5 ஆயிரம் வகையான நோய்கள் உள்ளன என நவீன மருத்துவம் கண்டறிந்து வகைப்படுத்தியுள்ளது. மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையுடன் இயைந்து வாழ்வதால், அவை தங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பொழுது, தாமாகவே அவற்றை சீர்படுத்திக் கொள்கின்றன. மனித இனமும் இவ்வியற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அவ்வாறு நாமும் இயற்கையுடன் இயைந்து வாழும்போது, ஆரோக்கியம் என்பது இயல்பான நிலையாகி விடும். எனவே தான் இயற்கை வாழ்வியல், ‘மனிதனின் இயல்பு ஆரோக்கியம்’ என்பதை முதல் பாடமாக வைக்கிறது. அந்த இயல்பு எப்பொழுதெல்லாம் தாழ்கிறதோ, அப்பொழுதெல்லாம், தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள, நமது உடலில் உறைந்துள்ள உயிராற்றல் செய்யும் பணிதான், நமது அறியாமையின் காரணமாக ‘நோய்’ என்றழைக்கப்படுகிறது. 

சற்று முன்னர் குறிப்பிட்டது போல், நாங்கள் இருவரும் இயற்கை வாழ்வியல் பணிமனைக்கு வரும்வரை பல்வேறு வகையான உடல் உபாதைகளினால் அவதியுற்று வந்தோம். அவற்றுக்கு நவீன மருத்துவம் மட்டுமன்றி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை முறைகளையும் வெவ்வேறு காலகட்டங்களில் பின்பற்றி வந்தோம். எந்த சிகிச்சை முறையும் முழுமையான ஆரோக்கியத்தை வழங்கவில்லை. ஆனால் இந்தப் பணிமனைக்கு வந்த பின்னர், ‘மாற்ற வேண்டியது சிகிச்சை முறைகளை அல்ல, நமது வாழ்க்கை முறையைத் தான்’ என்பதைப் புரிந்து கொண்டோம். இப்போது பணிமனை முடிந்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நாள் வரை நாங்கள் நோய்வாய்ப்பட்டதில்லை. முன்பு மருத்துவத்திற்கென்று ஒவ்வொரு மாதமும் செலவு செய்த பணம், இப்போது நஞ்சில்லா, இயற்கை விளைபொருட்களை வாங்கப் பயன்படுகிறது.

இந்த வலைப்பதிவை துவங்கும் முன்னர், எங்கள் இருவருக்கும் இருந்த உடல் உபாதைகளை விளக்கமாகக் குறிப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எங்களுக்கு இருந்த ஒரு சில நோய்களை மட்டும் குறிப்பிட்டு, அதிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாகக் கூறினால், அது இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு, இங்குக் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும், அந்த ஒரு சில நோய்களை மட்டுமே குணப்படுத்த உதவும் என்கின்ற தவறான எண்ணத்தை உருவாக்கலாம். எனவே தான், அந்நோய்களைப் பற்றிய முழு விவரங்களையும் இதில் எழுதவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நான், எனது பள்ளிப்பருவத்திலிருந்து, கடந்த 23 வருடங்களுக்கும் மேலாகக் கண்ணாடி அணிந்து வருகிறேன். இப்போது இயற்கை வாழ்வியலுக்கு மாறிய பின்பு, என்னுடைய பார்வைத்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது விரைவில் முழுவதுமாக சரியாகிவிடும் எனும் நம்பிக்கை உள்ளது.


எது உண்மையான ஆரோக்கியம்?

நாங்கள் இந்தப் பணிமனையில் கலந்து கொள்ளும் வரையிலும், ‘உண்மையான ஆரோக்கியம் என்பது எப்படி இருக்கும்?’, ‘பசி மற்றும் தாகம் உண்டாகும் போது ஏற்படும் அறிகுறிகள் என்ன?’, ‘உடல் சாதாரணமாக வெளியேற்றும் கழிவுகள் (மலம், சிறுநீர், வியர்வை) எப்படி இருக்க வேண்டும்?’ என்பது குறித்து அறிந்திருக்கவில்லை. முதலில் ஆரோக்கியத்தின் இலட்சணங்கள் பற்றித் தெரிந்திருந்தால் தான், நாம் உண்மையிலேயே ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோமா என்பதை உணர முடியும். எது ஆரோக்கியம் எனும் தெளிவு இல்லையெனில், எத்தனை விதமான மருத்துவ முறைகளின் மூலமும் தீர்வு கிட்டாது. இப்போது உண்மையான ஆரோக்கியமான உடல் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் கற்றுக் கொண்ட பின்னர், அறியாமையின் பிடியில் இருக்கும் பொதுமக்களையும், அவர்களுக்கு வெவ்வேறு மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருக்கும் மருத்துவர்களையும் கவனித்துப் பார்க்கிறோம். அப்படிப் பார்த்ததில் ஒரு விசயம் மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. அது என்னவென்றால், மக்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த வேண்டிய உயர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவர்களே, உடல் பருமன், தொப்பை, வழுக்கைத் தலை, கண்ணாடி அணிதல் போன்ற ஆரோக்கியமான மனிதனின் இயல்புக்குப் புறம்பான நிலையில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவர்களால் எப்படி அடுத்தவருடைய ஆரோக்கியத்திற்கு வழிகாட்ட இயலும்? உடல் பருமன் மற்றும் தொப்பை வயிறு ஆகியவை ஆண்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினைகளாகப் பார்க்க வேண்டாம். ஜெர்மனியில் வாழ்ந்த  இயற்கை மருத்துவர் லூயி குயினே அவர்களின் ‘Facial Diagnosis’ எனும் புத்தகத்தில் எழுதியிருக்கும், ஆரோக்கியத்திற்கான இலட்சணங்கள் அனைத்தும், அனைத்து வயதினருக்கும், குறிப்பாகக் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் பொருந்தும். நீங்கள் இப்புத்தகத்தைப் படித்தீர்களேயானால், நாங்கள் இங்கு சொல்லும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இயற்கை விதிகளைப் பின்பற்றி வாழும், உலகிலுள்ள எந்த ஆரோக்கியமான விலங்கும்  உடல்பருமனுடனோ, தொப்பை வயிற்றுடனோ இருப்பதில்லை. மற்றவர்களைப் பற்றிப் பேச எங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். இந்தப் பணிமனைக்கு முன்பு வரை, நாங்களும் அறியாமை காரணமாக இரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் மற்றும் நமது சமுதாயத்தால் மிகவும் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்களையே பின்பற்றி வந்தோம். அப்படி உள்ளே சென்ற வேதிப்பொருட்கள் அனைத்தும், உடலால் செரிக்கவும் முடியாமல், முழுவழுமாக உடலை விட்டு நீங்கவும் இல்லாமல்,  தேவையில்லாத கழிவுகளாக மாறி, உடல் திசுக்களிடையே தங்கி விட்டமையால், உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்பட்டது. பணிமனையில் ஏற்பட்ட விழிப்புணர்வினால், எங்கள் வாழ்க்கை முறையை மாற்றினோம். உடலிலிருந்த கழிவுகள் குறையக் குறைய, உடல் தன்னுடைய இயல்பான ஆரோக்கியமான தோற்றத்தை அடைந்து விட்டது. தேவையற்ற கழிவுகள் நீங்கிய பிறகு, உடல் பாரம் குறைந்து லேசாக உணர்கிறோம். எந்த செயல் செய்யும் பொழுதும் உடலில் எவ்விதமான அசௌகரியமும் ஏற்படுவதில்லை. எனவேதான் நாங்கள் இது குறித்து மற்றவர்களிடம் தைரியமாகப் பேச முடிகிறது.

Before Life Natural
After 3 months in Life Natural
நமது சமுதாயத்தில் ஒருவர் உடல் சற்று பூசினார் போல் அல்லது சற்று பருமனாக இருந்தால் மட்டுமே, அவர் ஆரோக்கியமாக அல்லது செல்வசெழிப்புடன் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாம் இந்த அர்த்தமற்ற மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இதன் காரணமாகவோ என்னவோ, எங்கள் உற்றார், உறவினரும், நாங்கள் எடை குறைந்து ஆரோக்கியமின்றிக் காணப்படுவதாக நினைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், எங்கள் உடலிலிருந்து வெளியேறியது பல வருடங்களாக உடலால் செரிமானம் செய்ய முடியாமல், உடலிலேயே தங்கி விட்ட கழிவுப்பொருட்கள் மட்டுமே அன்றி, உடலின் சதையோ, இரத்தமோ அல்ல என்பதை எவ்வாறு புரிய வைப்பது எனத் தெரியவில்லை. சில சமயங்களில் நாங்கள் இயற்கை வாழ்வியல் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களையும் இதைப் பின்பற்றச் சொன்னாலும், அவர்களால் அவற்றை முழுமனதுடன் தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை. ஒருவேளை அவர்கள், உடல் எடைக் குறைந்து மெலிந்த தோற்றத்தை அடைந்து விடுவோம் எனும் பயத்தில் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை. இப்படிப்பட்டத் தேவையற்ற சந்தேகங்களும், பயமும் மனதில் இருந்து முற்றிலும் நீங்க வேண்டும் என்பதாலேயே, ஒவ்வொரு தனிமனிதரும் இயற்கை வாழ்வியலின் அடிப்படைக் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். 

நம் ஒவ்வொருக்கும் தத்தமது உடல் சரியான விகிதத்தில், நல்ல தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்கின்ற ஆசை உள்ளது. ஆனால் அத்தகைய உடலமைப்பை அடைவதற்கு எது சரியான வழி என்பது தெரியாமல், மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்து, உடலை மிகவும் வருத்தி, மருந்துகள் சாப்பிடுவது முதல் அறுவை சிகிச்சை வரை செய்கின்றார்கள். சிலர் மணிக்கணக்கில் நடைப்பயிற்சி முதல் உடற்பயிற்சி வரை செய்கின்றனர். பலர் எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று நினைத்து, ‘இதுதான் நம் தலைவிதி’ என்பது போல் உடலின் தோற்றம் எப்படி மாறினாலும், அது ஒரு காலப்போக்கில் ஏற்படும் இயல்பான நிலை என்று  ஏற்றுக் கொண்டு வாழப் பழகி விடுகிறார்கள். இயற்கை வாழ்வியலை சரியான முறையில் கடைபிடிக்கும் பொழுது, ஆரோக்கியத்தின் இலட்சணங்களில் குறிப்பிட்டுள்ள உடல் தோற்றத்தை அடைவீர்கள். குறிப்பாக இளம் வயதிலேயே இவ்வாழ்க்கை முறையை பின்பற்றத் தொடங்கினால், வழுக்கை விழுதல், கண்பார்வைக் குறைதல், கேட்கும் திறன் குறைதல், பல் விழுதல் போன்ற வயதாகி விட்டதால் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் என்று நம்மால் நம்பப்படும் குறைபாடுகள் தோன்றாது. ஒருவேளை உங்களுக்கு இப்போது சற்று வயதாகி இருந்தாலும், இந்த வாழ்வியலுக்கு மாறும் பொழுது, மேலே குறிப்பிட்டவற்றுள், விழுந்த பல் மீண்டும் முளைப்பதைத் தவிர, மற்ற அனைத்து நிலைகளிலும் ஓரளவு முன்னேற்றம் காணலாம்.


எது சிறந்த உணவு?

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களின் வாழ்க்கை முறையும், உணவு முறையும், அவர்கள் வாழும் நிலப்பரப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் அங்கு கிடைக்கும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்ததாக இருந்தது. அதுவே பின்னர் மதம் மற்றும் இனம் சார்ந்த கலாச்சாரமாக மாறிவிட்டது. அதனோடு நாகரீக வளர்ச்சியும் இணைந்து விட்டதால், வாழ்க்கை முறைகளும் உணவுப் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. பல்வேறு விதமான சமையல் செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மனிதனின் நாக்கு சமைத்த உணவின் சுவைக்கு அடிமையாகி விட்டது. எனவேதான் இன்று நாம் உண்மையான சுவை எது என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு அறியாமையில் இருக்கின்றோம். நாம் உண்ணும் விதவிதமான உணவு வகைகள், நமது உடல் நலத்திற்கும், சீரண அமைப்பிற்கும் ஏற்றவைதானா எனும் அடிப்படைக் கேள்வியைக்கூட கேட்க மறந்துவிட்டோம்.

அதனால்தான், ஆண்டாண்டு காலமாக மனிதர்களுக்கு இடையே எது சிறந்த உணவு என்கின்ற குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக சைவ உணவு உட்கொள்பவர்களுக்கும், அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த விவாதம் முடிவுற வேண்டுமெனில், ஒவ்வொருவரும் முதலில் மனிதனின் உடற்கூறு, பற்களின் அமைப்பு, சீரண உறுப்புகள் செயல்படும் விதம், மனிதனின் மனம் இயல்பாக எத்தகைய உணவைத் தேர்வு செய்கிறது (அந்த உணவு சமைக்கப்படாமல் தனது இயல்பான நிலையில் இருக்கவேண்டும்) என்பது பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.  லூயி குயினே அவர்கள், இது குறித்த விரிவானத் தகவல்களைத் தனது ‘நியூ சயின்ஸ் ஆஃப் ஹீலிங்’ (பக்கங்கள் 86 முதல் 95 வரை) எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.  இதனைப் படித்த பிறகு அவரவர் மனதிற்கு எது சரியான உணவு என்று தோன்றுகிறதோ, அதையே பின்பற்றுதல் நலம் அளிக்கும். ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் தான் என்ன சாப்பிட வேண்டும், அது தனது உடல் மற்றும் குணத்தில் எத்தகைய மாற்றங்களை நிகழ்த்துகிறது, அந்த உணவு எப்படி, எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது, அது எவ்வாறு சமைக்கப்பட்டது ஆகிய விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் தலையாயக் கடமையாகும்.


பழைய உணவை உண்பதுதான் நாகரீகமா?

எது சிறந்த உணவு எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெறுவதைப் போன்றே, ‘சமைத்து மீந்து விட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சமைக்காத காய்கறிகள், பழவகைகளைக் குளிர்பதனப்பெட்டிகளில் வைப்பது பாதுகாப்பானதா இல்லையா’, என்கின்ற விவாதமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பச்சைக் காய்கறிகளும், பழங்களும், அவற்றின் இயல்புக்கு மாறான, மிகக்குறைவான வெப்பநிலையில் வைக்கப்படும் பொழுது, அவற்றின் உயிர்த்தன்மையை இழக்கின்றன. அப்படிக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதால், நம் உடல் அவற்றின் சத்துக்களை முழுமையாகப் பெறுவதில்லை. அதுபோல, காய்கறிகளையும் பழங்களையும், அடுப்பில் வைத்து சூடுபடுத்தி உண்ணும் பொழுதும், அவற்றின் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி ஏற்கனவே சமைத்துச் சத்துக்களை இழந்து விட்ட ஓர் உணவை, மீண்டும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பதில் எந்த அர்த்தமுமில்லை. எப்படிப் பார்த்தாலும், குளிர்சாதனப்பெட்டி நமக்குத் தேவையற்ற ஒன்று. 

குளிர்சாதனப்பெட்டி மோகம் பரவாத சில வருடங்களுக்கு முன்பு வரை, ஒரு வேளை சமைத்து மீந்து விட்ட உணவை, அதற்கடுத்த வேளை பரிமாறினாலே, நமது வீடுகளில் பெரும்பாலும் ஆண்களும், குழந்தைகளும் சாப்பிட மறுப்பார்கள். பல நேரங்களில் உணவு வீணாகிப் போய்விடுமே என்றெண்ணி, வேறு வழியின்றி அந்த வீட்டுப் பெண்கள் அதை சாப்பிட்டுக் காலி செய்வர். இப்போது குளிர்சாதனப்பெட்டி என்பது, நம் குடும்பங்களில் தவிர்க்க இயலாத ஒரு இன்றியமையாத பொருளாகி விட்டது.  அதுவும் நாகரீக வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டபடியால், பழைய உணவை சாப்பிட மறுத்தவர்கள் கூட, இப்போது மிகவும் பெருமையாக மற்றவர்களிடம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? “நாங்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு (அல்லது அதற்கும் மேல்) தேவையான உணவை சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடுவோம். சாப்பிடும் பொழுது, தேவையான அளவை மட்டும் எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுவோம்”. என்றோ ஒரு நாள் சமைத்து வைத்த பழைய உணவுகளை சாப்பிடுவதை எப்படி மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 
எந்த ஒரு உணவுப்பொருளும் சமைக்கப்பட்ட நிமிடம் முதல் அதன் தன்மையிலிருந்து மாறத் துவங்குகிறது. நேரம் செல்லச்செல்ல உணவு அதன் நேர்மறை குணத்திலிருந்து எதிர்மறை குணத்திற்கு (தமஸ்) மாறுகிறது. உணவின் குணம் மட்டுமன்றி, அதன் சத்துக்களும் அழியத் தொடங்குகிறது. எனவே, மக்கள் இந்தக் கருத்தை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு முறையும், புதியதாக சமைத்த உணவுகளையே உண்ண வேண்டும். சாத்வீக முறையில் (எண்ணை, புளி முற்றிலும் தவிர்த்து, உப்பு இல்லாமல் அல்லது மிகவும் குறைவாக பயன்படுத்தி) சமைக்கப்பட்ட உணவாக இருந்தாலும் கூட, சமைத்த இரண்டு மணிநேரத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதற்கான வாய்ப்பு இல்லையெனில், அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்குள்ளாவது சாப்பிட வேண்டும். 

கைநிறைய சம்பாதித்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும், தினமும் பழையதை சாப்பிடுவது தான் நாகரீகமா? இதில் வேலைக்கும் சென்று, வீட்டையும் நிர்வாகம் செய்யும் பெண்கள், வீட்டை மட்டுமே நிர்வகிக்கும் இல்லத்தரசிகள் என்கின்ற எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. அதற்காக வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டும், நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளக் குளிர்சாதனப்பெட்டியைப் பயன்படுத்தலாம் என்று சொல்லவில்லை. அதை யார் உபயோகித்தாலும், என்ன காரணத்திற்காக உபயோகித்தாலும், அது அவரவர் குடும்பத்தினரின் உடல்நலத்தைக் கெடுக்கும். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும், பழைய உணவையே தினமும் சாப்பிட்டு பழகி, புதிதாக சமைத்த உணவின் சுவை எப்படி இருக்கும் என்பதைக் கூட மறந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது.

இதில் கவலைக்குரிய விசயம் என்னவென்றால், இப்படி ஒரு நாள் முன்போ அல்லது ஒரு வாரத்திற்கு முன்போ சமைத்து வைத்து, தினமும் பழைய உணவையே சாப்பிடுவது, அவர்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நினைத்தால், பரவாயில்லை. அவர்கள் மட்டும் தாராளமாக சாப்பிட்டு விட்டுப் போகட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால், அப்படிப்பட்ட பழைய உணவுகளை, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குப் பரிமாறுவதும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதும் இப்போது ஒரு பழக்கமாகி வருகிறது. விருந்தோம்புதல் என்பது நமது நாட்டின் உயரியக் கலாச்சாரம். மக்களின் மனநிலை அதைக்கூட மறந்துவிடும் நிலைக்கு மாறிவிட்டதா என்ன? இன்னும் சொல்லப்போனால், கோவில்களுக்குப் பிரசாதமாகத் தர வேண்டும் எனும் நோக்கத்தில், வீட்டில் உணவு தயாரித்து எடுத்து வருபவர்களும், பல மணிநேரத்திற்கு முன்பே சமைத்துக் குளிர்ப்பதனப்பெட்டியில் வைத்து விடுகிறார்கள். அவ்வாறு சமைத்து அதிக நேரம் ஆன உணவை நாங்கள் சுவைக்கும் பொழுதே, அதன் உண்மையான சுவையிலிருந்து மாறுபடுவதனால் எளிதில் வித்தியாசம் தெரிந்து விடுகிறது. இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு, புத்தம் புதிதாய் சமைக்கப்பட வேண்டும் என்கின்ற மனநிலை எப்போது முதல் மாறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. ஒருவேளை இது, குளிர்சாதனப் பெட்டிகளின் விளம்பரங்களைப் பார்த்து, நம் மக்களின் மனம், அதில் வைக்கப்படும் உணவுகள் எல்லாம் பலமணி நேரங்கள் புத்தம் புதியதாக இருப்பதாக நம்பத் தொடங்கியதால் ஏற்பட்ட மாற்றமா?  சமுதாயத்தில் இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்கும் போது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. குளிர்சாதனப் பெட்டி இருக்கும் வரை, அவ்வீட்டில் நோயும் இருந்து கொண்டேயிருக்கும்.

ஒரு சிலர் வீட்டில் மீந்து விட்ட உணவை, வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்குத் தருவர். அல்லது சாப்பாட்டிற்கு வழியின்றித் தவிக்கும் யாரோ ஒருவருக்குத் தருவர். அப்படி மற்றவர்களுக்குத் தானமாய்த் தருவதாய் இருந்தாலும், அவர்களுக்கும் இந்த விதிமுறைப் பொருந்தும். ஏனெனில் அவர்களும் நம்மைப் போன்ற சீரண உறுப்புகளைப் பெற்ற மனிதர்கள் தான். எப்படிப் பழைய உணவை உண்ணும் போது, நம் உடல்நலம் கெடுகிறதோ, அது போல, வறுமையில் இருப்பவர்களுக்கும் ஆரோக்கியம் கெடும். ஒருவேளை விருந்தின் போது உணவு மீதமானால், விருந்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், மீதமிருக்கும் உணவை, சமைத்த நான்கு மணிநேரத்திற்குள், மற்றவர்கள் சாப்பிடுவதற்கு வழிவகை செய்யுங்கள். பொருளாதாரத்தில் நம்மை விடக் குறைந்த நிலையில் இருப்பவர்கள் தானே, அவர்களுக்கு எவ்வளவு பழைய உணவை வேண்டுமானாலும் தரலாம் எனும் மிக மோசமான எண்ணம் வேண்டாம். அப்படி நினைத்து தருவதன் மூலம், நாம் புண்ணியத்திற்குப் பதில் பாவத்தையே சம்பாதிக்கிறோம். பகிர்ந்து கொள்ளவதற்கு யாரும் இல்லையென்றால், தயவுசெய்துத் துப்புரவுப் பணி செய்யும் பறவைகள், விலங்குகள் மற்றும் நுண்ணியிரிகளுக்குக் கொடுத்து விடுங்கள்.


சமையல் ஒரு சாத்தான்:

இயற்கை வாழ்வியல் சமையலை ஒரு சாத்தான் என்கிறது. ‘அப்படியென்றால், ஏன் நீங்கள் எழுதியிருக்கும் இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளில் சமைத்த உணவுகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள்?’ எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தக் கேள்வி மிகவும் நியாயமான ஒன்று. இயற்கை வாழ்வியல், சூரியனால் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகள், அதாவது பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழவகைகளையே உண்ண அறிவுறுத்துகிறது. கீரைகள் மற்றும் காய்கறிகளில், ஒருசில வகைகளை, சமைத்த பிறகே சாப்பிட முடியும். அது மட்டுமின்றி, நாம் பல ஆண்டுகளாக சமைத்த உணவுகளையே சாப்பிட்டு பழகி விட்டதால், அவற்றின் சுவைகளுக்கு அடிமையாகிவிட்டோம். புதிதாக இயற்கை வாழ்வியலுக்கு மாறுபவர்கள், திடீரென்று முழுவதுமாக சமைத்த உணவுகளை மறந்துவிட முடியாது. நம் எண்ணங்களிலிருந்து அவற்றை நீக்குவதற்கு, தியானம், யோகா போன்ற மனதை நல்வழிப்படுத்தும் பயிற்சிகளையும், உணவு சீர்திருத்தத்துடன் சேர்த்து செய்து வர வேண்டும். இத்தகைய பயிற்சிகளுக்குப் பிறகு, சமைத்த உணவின் சுவைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்கள், பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டுமே உண்ணலாம். அத்தகைய மனப்பக்குவத்தை ஒருவர் அடையும் வரை, நமது உடலின் செரிமான ஆற்றல் உச்சத்திலிருக்கும் மதியம் ஒருவேளை மட்டும், சாத்வீக முறையில் சமைத்த உணவுகளை உண்ணலாம். இயற்கை வாழ்வியலில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளில் தரப்பட்டுள்ள அனைத்து உணவு செய்முறைகளும், எங்கள் ஆசான் அவர்களால் செய்து பார்த்துக் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். அவர் சமையலை ‘சாத்வீக சாத்தானாக’ எப்படி மாற்றுவது என்று கூறியுள்ளார்.


கிருமிகள் மீது போடப்படும் பழி:

நம்மிடம் ஒரு பொதுவான பழக்கம் உள்ளது. நமக்கு ஏதாவது நன்மை நடந்தால், உடனே அது நம் முயற்சியால் தான் நடந்தது என மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், மனதிற்கு விருப்பமில்லாத ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால், அதற்குக் காரணமாக நம்மைச் சுற்றி இருப்பவரையோ, சூழ்நிலையையோ, வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் விதியையோ குறை சொல்கிறோம். அந்தப் பிரச்சினை தோன்ற அடிப்படைக் காரணம் என்ன என்பதை நாம் அறிய முற்படுவதில்லை. ஒருவேளை அந்தப் பிரச்சினைக்கு நாம்தான் காரணம் என்றுத் தெரியவந்தாலும், அதை மனமார ஒப்புக்கொள்வதில்லை. அதைப்போலவே, உடல்நிலை சரியில்லாமல் போனாலும், அது கிருமிகளினால் தான் ஏற்பட்டது என்று உடனடியாகப் பழியைக் கிருமிகள் மீது போடுகிறோம். 
நவீன மருத்துவம் கிருமிகளால்தான் நோய் ஏற்படுகிறது எனும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை எப்போதும் அச்சத்தின்பிடியிலேயே வாழும்படி செய்துவிட்டார்கள். இது தொற்றுநோய் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை ஒரு தொடர்கதையாகி, குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ‘கிருமிகளால் நோய்கள் உண்டாவதில்லை. மாறாக நோயைக் குணப்படுத்துவதற்காகவே கிருமிகள் உடலில் உருவெடுக்கின்றன’ எனும் கோட்பாட்டைப் பல ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நிரூபித்து வந்துள்ளனர். இதுகுறித்தத் தகவல்களை மற்றொரு வலைப்பதிவில் விரிவாகப் பார்ப்போம். நமது ஆரோக்கியம் கெடுவதற்கு, நமது தவறான வாழ்க்கைமுறை தான் காரணம் எனும் உண்மையை எப்போது நாம் மனமார ஏற்றுக் கொள்கிறோமோ, அப்போது தான் நாம் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி முதல்அடி எடுத்து வைக்க முடியும். எல்லாவற்றிற்கும் அடுத்தவர் மேல் பழி சொல்வதால், நாம் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை.


குறுக்குவழி ஆரோக்கியத்திற்கான வழி அல்ல:

நம்மிடம் உள்ள மற்றொரு கெட்டப்பழக்கம், எந்த விசயத்தையும், குறுக்கு வழியில் அடைய நினைப்பது. எதற்கும் பொறுமை இல்லை. நேரமும் இல்லை. எனவே தான், உடல்நலம் தாழும் பொழுதும், அது எதனால் ஏற்பட்டது என அடிப்படைக் காரணம் குறித்து நிதானமாகச் சிந்திப்பது இல்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது மிக விரைவாக நோய் சரியாகி விட்டால் போதும் என நினைக்கிறோம். நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு, எந்தச் சிகிச்சை முறை அல்லது மருந்து, மாத்திரை விரைவாக வேலை செய்வதாகத் தோன்றுகிறதோ, அதுதான் சிறந்தது என ஏற்றுக் கொள்கிறோம்.

மற்ற மருத்துவ முறைகளில், நோயாளிகள் எதுவும் செய்யத் தேவையில்லை. சும்மா இருந்தாலே போதுமானது. மருத்துவர் அல்லது செவிலியர் நமக்குத் தேவையானதை செய்து விடுவர். நாம் அவர்கள் எழுதித் தரும் மருந்து, மாத்திரைகளை மட்டும், ‘ஆகா, நாம் எவ்வளவு விலை உயர்ந்த மருந்து சாப்பிடுகிறோம்’, என்று மிகப் பெருமையாக நினைத்து விழுங்கினால் போதும். ஆனால் இயற்கை வாழ்வியலில், ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு, எவ்வித குறுக்கு வழியும் இல்லை. இங்கு ஆரோக்கியத்தை முறையாக வாழ்ந்துதான் பெறவேண்டும். இதில் கற்றுத் தரப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும், நோயாளிகள் தமக்குத் தாமே, அவரவர் வீட்டிலேயே எளிய முறையில் செய்துகொள்ளக் கூடிய வழிமுறைகள் ஆகும். ஒருசில சிகிச்சைகளைச் செய்வதற்கு மிகமிகக் குறைவான செலவே ஆகும். ஒருசிலவற்றிற்கு எந்த செலவும் செய்யத் தேவையில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரையில், ஒருசில இயற்கை மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். நமது சோம்பேறித்தனம் மற்றும் நம் உடல் மீது நமக்கிருக்கும் அக்கறையின்மை காரணமாக, நாம் மற்ற மருத்துவமுறைகளில் செய்வதைப் போலவே, இங்கேயும் பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். எளிமையான சிகிச்சை முறைகளை எப்படிச் செய்வது என விளக்கம் தந்தாலும், இவற்றைச் செய்து பார்க்க மக்கள் பெரும்பாலும் முயற்சிப்பதில்லை. “எங்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை”, என்று மிக எளிதாக சாக்குப்போக்கு சொல்லிவிடுகின்றனர். தமது உடல்நலத்தின் மீது தமக்கே அக்கறையில்லை எனில், வேறு யாரால் அவர்களைக் குணப்படுத்த இயலும்?


மறந்துபோன பள்ளிப்பாடமும், முன்னோர் சொன்னப் பழமொழிகளும்:

நாம் ஏற்கனவே பள்ளிகளில் உணவுமண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து படித்துள்ளோம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரான உணவுப்பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறோம். நமது முன்னோர்களும், உணவு குறித்த பழமொழிகளைச் சொல்லியிருக்கிறார்கள். நாம் அந்தப் பழமொழிகளில் உள்ள அர்த்தத்தை வேறுவிதமாகப் புரிந்து கொண்டு, தவறான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுகிறோம். உதாரணமாக, ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பது பழமொழி. இங்குக் கூறியுள்ளதைப் போல் உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால், நாம் யாருமே இதைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில், நாம் உண்ணும் எல்லா உணவு வகைகளும், நன்றாக மெல்வதற்கு ஏற்றவாறு சமைக்கப்படவில்லை. நாம் ஒரு கவளத்தை ஓரிரண்டு முறை மெல்வதற்குள்ளேயே, உணவானது வாயிலிருந்து வழுக்கிக் கொண்டு உணவுப்பாதைக்குள் சென்று விடுகிறது. அதுபோலவே ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’, இங்கு உப்பு என்று சொல்லப்படுவது சமையலில் பயன்படுத்தப்படும் கடல் உப்பு அல்ல. மாறாக அது தாவரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் தாதுஉப்புக்களைக் குறிக்கும். அப்படித் தாதுஉப்புக்கள் இல்லாதப் பண்டத்தை உண்ணக்கூடாது எனும் கருத்தைப் புரிந்து கொள்ளாமல், நமது வசதிக்கேற்றவாறு அதனைத் திரித்து விட்டோம். திருவள்ளுவர் திருக்குறளில் ‘மருந்து’ எனும் அதிகாரத்தின் வாயிலாகவும், திருமூலர் திருமந்திரத்தில் பல்வேறு பாடல்களின் மூலமும் மக்களுக்கு உயரியக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். இதுபோன்றப் பாடல்களை மொழிபெயர்க்கும் அறிஞர்கள், அவரவர் புரிதலுக்கேற்ப, பல்வேறு விதமான அர்த்தங்களை வழங்கியிருக்கின்றனர். நமது அறியாமைக்கு அதுவும் ஒருவகையில் காரணம் எனலாம்.

உணவுமுறைகளைப் போலவே, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் இயற்கையைச் சார்ந்த நெறிமுறைகளையே நம் முன்னோர்கள் வகுத்திருந்தார்கள். நாகரீக வளர்ச்சி எனும் பெயரில், மனிதகுலம் இயற்கையின் அனைத்து விதிகளிலிருந்தும் விலகிச் சென்றதன் விளைவுதான், நாம் இன்று கண்முன் காணும் அனைத்து வகையான துன்பங்களுக்கும் காரணம். இயற்கை வாழ்வியல் என்பது ‘மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம்’. அதைப் புரிந்து கொண்டால் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ளத் தொடர்பு என்ன, மனிதனின் எண்ணங்களுக்கும், உணவுக்கும் உள்ளத் தொடர்பு என்ன என்பது குறித்த தெளிவு கிடைக்கும். நம்மில் நிறைய பேருக்கு இயற்கை வழி நடக்க வேண்டும் என்று சொன்னால், ‘அப்படி என்றால் நாம் எல்லோரும் கற்காலம் போன்று காட்டில் சென்று வசிக்க வேண்டுமா?’ என்கின்ற சந்தேகம் வந்துவிடுகிறது. எனவே முதலில் நாம் எது உண்மையான நாகரீக வளர்ச்சி எனும் தெளிவு பெறவேண்டும். 


அறியாமையினால் செய்யப்படும் ஏளனம்:

எங்களுடைய இந்த இரண்டரை வருட வாழ்க்கை முறையைக் குறிப்பாக உணவுப் பழக்கத்தைப் பார்க்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களில் ஒரு சிலர் ஏளனம் செய்வதுண்டு. நாங்கள் ஏதோ சுவையற்றப் பச்சைக் காய்கறிகளையும், வெறும் பழங்களையும் மட்டும் சாப்பிடுபவர்கள் என்று நினைக்கின்றார்கள். உண்மையில் பார்க்கப்போனால், அவ்வாறு ஏளனம் செய்பவர்களே ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பார்கள். அல்லது அவர்களுடைய குடும்பத்தினர் யாராவது நோயாளிகளாக இருப்பர். இங்குப் பிரச்சினை என்னவெனில் தாம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கொண்டோ, சுயமாக மருந்து மாத்திரைகளை உட்கொண்டோ அல்லது மருத்துவமனைகளுக்கு அலைந்து கொண்டோ மிகுந்த பணச்செலவு செய்து, உடலையும் வருத்திக் கொண்டு இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் ஏளனம் செய்வதை நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை. அது அவர்களின் அறியாமையினால் ஏற்படுவது. அவர்களுக்கு, இயற்கை வாழ்வியலில் நாங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்கின்ற முழு விபரமும் தெரியாது. அதனைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.  ஒருவேளை அப்படி தெரிந்து கொண்டால், அதன் பின்னர் சமுதாயத்தால் சுவையான அல்லது சத்தான உணவு என்று பின்பற்றப்படுகின்ற, உணவு வகைகளை இனிமேல் நாம் சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்கின்ற பயமா எனத் தெரியவில்லை. எனவே, எங்களை ஏளனம் செய்பவர்கள், முதலில் இயற்கை வாழ்வியலை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளட்டும். அதன் பின்னர், அவர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், எங்களிடம் தாராளமாக விவாதிக்கலாம். இப்படி அறியாமையின் பிடியில் சிக்கியிருக்கும் அன்பர்கள் என்றாவது ஒருநாள் உண்மையான ஆரோக்கியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறோம்.


நாங்கள் எதிர்கொள்ளும் பொதுவான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும்:

இயற்கை வாழ்வியலைப் பின்பற்றி, அதிக வருடங்கள் வாழ ஆசையா?
வயதாகிவிட்ட பிறகு, நாங்கள் ஏன் இதைப் பின்பற்ற வேண்டும்?

நாங்கள் எதிர் கொள்ளும் முக்கியமான கேள்வி, “நீங்கள் இயற்கை வாழ்வியலைப் பின்பற்றுவதன் மூலம், உங்களின் ஆயுட்காலத்தை நீடித்து, இளமையான தோற்றத்துடன், அதிக வருடங்கள் வாழ ஆசையா?”, என்பது தான். அதுபோலவே நாங்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டு விட்டு வயதான ஒரு சிலர், “எங்களுக்குத் தான் ஏற்கனவே வயதாகி விட்டதே, உயிருடன் இருக்கும் சில வருடங்களுக்காக ஏன் எங்கள் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்? இருக்கும் வரை சந்தோசமாக சாப்பிட்டு அனுபவித்து விட்டுப் போகிறோம். நோய் வந்தால் மாத்திரை சாப்பிட்டுக் கொள்கிறோம்”, எனக் கூறுகின்றனர். இந்த இரண்டு வகையான கேள்விகளுக்கும், பொதுவான பதிலை எங்கள் பணிமனையின் ஆசான் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் வகுப்பிலேயே வழங்கி விட்டார். அதையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்:  'இயற்கை வாழ்வியல் முறையின் நோக்கம், ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது அல்ல. மாறாக அவன் சாகும் வரையிலும், தனது இயல்பான நிலையாகிய, முழு ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை எவ்வாறு முறையாக வாழ்ந்து பெறுவது என்பதைக் கற்பிப்பது தான் இதன் நோக்கம்'.

இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே இங்கு வாழ முடியும். இது ஒரு பொது விதி. அவ்விதியை யாராலும் மீற இயலாது. அப்படிக் காலக்கெடு முடியும் பொழுது, உடலில் எந்த நோயும் இல்லாமல், எந்தச் சிரமமும் இல்லாமல் உடலை விட்டு உயிர் தானாக நீங்க வேண்டும். ஆனால் தற்போது நம்மைச் சுற்றி இருந்தவர்களில் எத்தனை பேர், அப்படிப்பட்ட அற்புதமான மரணத்தைப் பரிசாகப் பெற்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம். எல்லோரும் ஒருநாள் போகத்தான் போகிறோம். போகும் பொழுது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்தத் தொந்தரவுமின்றிப் போகின்றோமா என்றால், அதுதான் இல்லை. உடலில் எல்லா வகையான நோய்களுக்கும் இடமளித்து, தீவிரமான சிகிச்சை முறைகளுக்கு ஆட்பட்டு, குடும்பத்தினருக்குப் பணக்கஷ்டம் மற்றும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி, நாமும் துன்பப்பட்டுச் சுற்றியிருப்பவரையும் துன்புறுத்தி, ‘இந்தப் பெரிசு எப்போது போய்ச் சேரும்?’ என்று நமது உறவினர்களையே மிகக் கேவலமாக நினைக்க வைத்து விடுகிறோம். இன்றைய காலகட்டத்தில், விபத்தினால் ஏற்படும் இறப்பைத் தவிர, பெரும்பாலும் இறப்பு என்பது நோய்களினால் ஏற்படுகிறது. இயற்கையான இறப்பு என்ன என்பது தெரியாமல் போய்விட்டது. நமது தவறான வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், நம்மை நாமே தினம்தோறும் சிறிது சிறிதாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறோம்.

இதைக் கேட்ட பிறகுதான், இயற்கை வாழ்வியலின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டோம். நாம் எத்தனை வருடங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பது நம் கையில் இல்லை. ஆனால் அதுவரை ஆரோக்கியத்துடன் இருப்பது நிச்சயம் நம் ஒவ்வொருவரின் கையில் தான் இருக்கிறது. பணிமனைக்கு முன்பு வரை, யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய நோய்கள் என்று மருத்துவம் பட்டியலிட்டுள்ள மாரடைப்பு, சர்க்கரை, இரத்தக்கொதிப்பு, அதிகப்படியான கொழுப்புச்சேர்க்கை ஆகியவை குறித்த பயம் எப்போதும் மனதில் இருந்து கொண்டேயிருந்தது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் பற்றிய பயத்தைத் தவிர்க்க இயலவில்லை. ‘இம்மாதிரியான வாழ்வியல் நோய்கள், நமது தவறான வாழ்க்கை முறையினால் மட்டுமே தோன்றுகின்றன’ என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டதும், மனதில் இருந்த அச்சம் நீங்கியது. நவீன மருத்துவம் இதுநாள்வரை, புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தைக் கூடக் கண்டறியாமல் இருக்கிறது. ஆனாலும் பலவகையான சிகிச்சை முறைகளைச் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாங்கள், நமது தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றால்தான் இந்நோய் ஏற்படுகிறது என்று சொன்னால், எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. அது போலவே கிருமிகளால் பரவக்கூடிய நோய்களாக அறியப்பட்டுள்ள, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், இன்னபிற புதுப்புது நோய்களைக் கண்டும் நாங்கள் இனி அச்சம் கொள்ளப் போவதில்லை. மனதில் அறியாமை எனும் இருள் சூழ்ந்திருக்கும் போது, நோய்கள் குறித்த பயம் இருக்கும். விழிப்புணர்வு எனும் வெளிச்சம் தோன்றினால் அந்தப் பயம் மறைந்து விடும்.

முன்பு நாங்கள் நோயாளிகளாக இருந்த காலத்தில் எப்பொழுதெல்லாம், மருத்துவமனைக்குச் சென்று வந்தோமோ, அப்போதெல்லாம், பணம் செலவாகிறது எனும் கவலை ஒருபுறம் இருந்தது. ஆனாலும் மறுபுறம், அப்படி அதிநவீன மருத்துவமனைகளுக்குச் செல்வது மனதிற்குள் ஒருவகையான பெருமிதத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவ்வாறு செலவு செய்வதன் மூலம், ஒரு போலியான கவுரவம் கிடைத்தது போன்ற எண்ணம். அதேபோல, நாம் நோயாளியாக இருப்பதைக் கண்டு மற்றவர்கள் கொள்ளும் பரிதாபம் கூட ஒருவகையான சுயபச்சாதாபம் அடைய வைத்தது. ‘அய்யோ பாவம், இவர் உடல்நிலை சரியில்லாதவர்’ என்று சுற்றத்தினர் இரக்கம் கொள்ள வேண்டும் என்றும், ‘அடேயப்பா, இவர் இவ்வளவு விலை உயர்ந்த மருத்துவத்தைச் செய்திருக்கிறாரா’ என மற்றவர்கள் பேச வேண்டும், என்றும் நினைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று இப்போது புரிகிறது. “நமது சமுதாயத்தில் மக்கள், மருத்துவமனைக்குச் சென்று வந்து பின்னர், அதை மற்றவர்களிடம் ஏதோ இன்பச்சுற்றுலா சென்று வந்ததைப் போல் பெருமையாகப் பேசுகிறார்கள்”, என எங்கள் வகுப்பின் போது ஆசிரியர் கூறுவதுண்டு. அதைக் கேட்ட பிறகு தான், நாமும் அத்தகைய தற்பெருமை எண்ணத்துடன் தான் இருந்துள்ளோம் என்பதை உணர்ந்தோம்.


இயற்கைவழி விவசாயத்தில் கிடைக்கும் விளைபொருட்களுக்கு ஆகும் செலவை எப்படிச் சமாளிப்பது?

நாங்கள், இயற்கைவழி விவசாயத்தில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை மட்டுமே வாங்குவதைக் கேள்விப்படும் நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்விகள் என்னவெனில், “இந்தப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் வீட்டுச்செலவு அதிகமாகும் இல்லையா? அதனை எப்படிச் சமாளிப்பது?”. அவர்களுக்கு நாங்கள் தரும் விளக்கம் இதுதான். நாங்கள் எப்பொழுது வேதியுரங்களினால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை இனிமேல் வாங்க வேண்டாம் என முடிவு செய்தோமோ, அப்போது மனதில் எழுந்த முதல் பயம் இதுதான்- ‘ஒரு வேளை இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வது? உணவுக்கான மாதச்செலவு அதிகரிக்குமே?’, என்ற குழப்பத்தில் இருந்தோம். ஆனாலும் ஒரு விசயத்தில் மட்டும் தெளிவாய் இருந்தோம். நாம் நல்ல உணவைப் பெறுவதற்காக எவ்வளவு செலவு செய்தாலும், அது நம் ஆரோக்கியத்திற்காகச் செய்யும் முதலீடாகும். நல்ல உடலும், மனமும் அமைந்து விட்டால், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நாமே ஈட்டிக் கொள்ளலாம். இயற்கை விளைபொருட்கள் விலை சற்று அதிகம் என்பதற்காக நாம் வாங்காமல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி, விஷம் கலந்த உணவுப் பொருட்களை நாமும் உண்டு, நம் குழந்தைகளுக்கும் கொடுத்து உடல்நலம் குறைந்தால் அப்போது என்ன செய்வோம்? நோயைக் குணமாக்க, அதிகப் பொருட்செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம், இல்லையா? அவ்வாறு நோயில் விழுந்து, நாம் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, ஒரு சில நிமிடங்களில் மருத்துவமனையில் செலவு செய்வதைக் காட்டிலும், நமது ஆரோக்கியத்தை நிலைநாட்டும், சுவையும் சத்தும் மிகுந்த இயற்கை முறையில் விளைந்த, உன்னதமான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவது தான் சிறந்தது. 

ஒவ்வொருவரும், தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கென, அவரவர்களுக்கு முடிந்த வரையில் செல்வத்தை சேமித்து வைக்கிறோம்.   சிறந்த கல்வி கிடைக்கவும் ஏற்பாடு செய்கிறோம். அவற்றை எல்லாம் அனுபவிப்பதற்கு முதலில் அந்தக் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பது அவசியம் இல்லையா? நச்சுக் கலக்காத உணவுப் பொருட்களுக்காக, விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை என்று, இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் ஏன் தயங்குகிறோம் என்பது தான் புரியவில்லை. அவர்களின் எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்கும் செல்வத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் பொருட்டு, செலவு செய்யலாம் அல்லவா? அப்படி நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்செல்வத்தை தாங்களாகவே ஈட்டிக் கொள்ளமாட்டார்களா? ஒருவேளை ஒருவருக்கு உண்மையிலேயே இயற்கைவழி விவசாய விளைபொருட்களை வாங்கவேண்டும் எனும் ஆர்வம் இருந்தால், அவர் சிறிது நேரத்தை  செலவு செய்துத் தேடினால் போதும், அதிக லாப நோக்கமில்லாமல் யார் அப்படிப்பட்டப் விளைப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களை வாங்குவதோடு மட்டும் இல்லாமல், அந்த உணவுப் பொருட்களை எப்படி சரியான முறையில் சாப்பிடுவது என்கிற, இயற்கை வாழ்வியல் முறைக் கற்றுத்தரும் தொழில்நுட்பத்தையும், விதிமுறைகளையும் தெரிந்து கொள்வது முக்கியம். அதையும் பின்பற்றினால் மட்டுமே, நாம் செய்யும் செலவுக்கான முழுப்பலன் கிட்டும். இதை ஏன் நாங்கள் இங்கு வலியுறுத்துகிறோம் என்றால், இயற்கைவழி விவசாயத்தில் விளைந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பதார்த்தங்களிலும், சுவைக்காகவும், பொருள் எளிதில் கெட்டுவிடாமல் இருக்கவும், மற்ற மூலப்பொருட்களாகவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இயற்கைமுறையில் விளைந்த கோதுமை மற்றும் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையைக் கொண்டு, கேக் தயாரிக்கப்படுவதாக இருந்தாலும், அதில் பேக்கிங் சோடா கலக்கப்படுகிறது. இப்படி எந்தக் காரணத்திற்காக இரசாயனங்களை உணவில் சேர்த்தாலும், அது மீண்டும் உடலுக்கு தீமையையே ஏற்படுத்தும். எனவே உணவை வீட்டில் தயாரித்தாலும், வெளியே வாங்கினாலும், அதில் எவ்வித இரசாயனக்கலப்பும் இல்லை என்பதை உறுதி செய்வது முக்கியம். எப்போதும் விழிப்புணர்வுடன் உணவைத் தேர்வு செய்வோம். 


இயற்கைவழி விவசாயப் பொருட்களின் நம்பகத்தன்மையை அறிவது எப்படி?

இயற்கைவழி விவசாய விளைபொருட்கள் தொடர்பாக நாங்கள் எதிர் கொள்ளும் இன்னொரு கேள்வி, “நீங்கள் வாங்கும் பொருள்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் தான் விளைவிக்கப்படுகிறது என்பதை எவ்வாறு நம்புகின்றீர்கள்?ஒருவேளை அதிலேயும் நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா?”. இந்தக் கேள்வியை யார் கேட்கிறார்களோ, அவர்களை நாங்கள் திரும்பக் கேட்கும் கேள்வி இதுதான், “நீங்கள் வழக்கமாகக் கடைகளில் வாங்கும் பொருட்களில், அவை எப்படி விளைவிக்கப்பட்டது? அதில் எவ்வளவு வேதியுரம் கலந்திருக்கிறது எனும் தகவல்கள் உள்ளனவா? அதை என்றாவது நீங்கள் யோசித்தாவதுப் பார்த்ததுண்டா? ஆனால் இயற்கை முறை விளைபொருட்களைக் குறித்துப் பேசினால் மட்டும் ஏன் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன எனத் தெரியவில்லை. உண்மையில் இரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் போதுதான் நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடைகளில் வண்ணமயமான உறைகளில், டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களில் என்ன மூலப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதை நம்மில் எத்தனை பேர் சரிபார்க்கிறோம்? ஒருவேளை  உங்களுக்கு உண்மையாகவே இயற்கை முறை விளைபொருட்களை வாங்க வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால், உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் இயற்கைவழி விவசாயம் செய்யும் விவசாயிகள் அல்லது விற்பனையாளர்களை நேரில் சென்று சந்திக்கவும். இயற்கைவழி விவசாயியாக இருந்தால், அவர் நிச்சயம் தனது சாகுபடி செய்யும் நிலத்தையும், கையாளும் முறைகளையும் உங்களுக்குக் காண்பிப்பார். கடையாக இருந்தால், அவர்கள் எங்கிருந்து பொருட்களை வரவழைக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் விவசாய முறைகளைப் பரிசோதனை செய்கிறார்கள் எனும் தகவல்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். எப்போது அந்த விற்பனை நிலையத்தினர், விவசாய நிலத்தை மேற்பார்வையிட செல்கிறார்களோ, நீங்களும்  அவர்களுடன் இணைந்து சென்று நேரில் பார்த்துவிட்டு வரலாம்.

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த வழி யாதெனில், அவரவர் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைப்பதுதான். இயற்கைவழி விவசாயம் குறித்த விழிப்புணர்வு அடைந்த பலர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூட மிகக்குறைந்த செலவில் தோட்டம் அமைத்து இருக்கின்றனர். இடவசதி இருக்கும் பட்சத்தில் வீட்டைச் சுற்றியும், மாடியிலும் கூட தோட்டம் அமைக்கிறார்கள். நமக்கு உண்மையிலேயே, நமது மற்றும் குடும்பத்தினரின் நலனில் அக்கறை ஏற்பட்டால், நமது சூழலுக்கு ஒத்துவரும் ஏதாவது ஒரு வழிமுறையை கடைபிடிக்க முடியும்.




அடிப்படைக் கருத்துக்களை அறிவதின் அவசியம்:

இயற்கை வாழ்வியலைப் பின்பற்ற விரும்புபவர்கள், முதலில் அதன் அடிப்படைக் கருத்துக்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மனதில் இருக்கும் எல்லா விதமான சந்தேகங்களும் நீங்கினால் தான், இவ்வாழ்க்கை முறையை உறுதியுடன் பின்பற்ற முடியும். எனவே தான், இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் குறித்து, எங்களைத் தொடர்பு கொள்பவர்களை இயற்கை வாழ்வியல் கருத்துக்களை முதலில் படிக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம். அடிப்படைக் கருத்துக்கள் தெரியாமல், வெறுமனே உணவு முறைகளை மட்டும் படித்துவிட்டு, அதன்படி நடக்க முயன்றால், அதை நீண்ட நாட்களுக்கு வெற்றிகரமாகப் பின்பற்ற முடியாது. ஏனெனில் காலம்காலமாக நாம், மிகவும் சிறந்தது என்று நம்பிப் பின்பற்றி வரும் உணவுப் பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் திடீரென்று மாற்றும் பொழுது, உங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் மற்றும் நண்பர்களும் அவர்களின் அறியாமை காரணமாகக் கேள்விகள் எழுப்பக்கூடும். அப்போது நாம் தெளிவாக இருந்தால் தான், அவர்களுக்குப் பதிலளிக்க முடியும். இல்லையெனில், நாம் தான் ஏதேனும் தவறு செய்கின்றோமோ என்றெண்ணி மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவோம்.
நாங்கள் ஏழு நாட்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தையும் இந்த வலைப்பூவில் எழுதுவது சற்றுக் கடினமான ஒன்று. எனவேதான், எங்களால் எவ்வளவு தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ, அவற்றைத் தர முயற்சி செய்கிறோம்.


எங்களின் பரிந்துரை:

கட்டுரையின் தொடக்கத்தில் கூறியதைப் போன்று, இந்நாட்களில் உலகெங்கும் உள்ள இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்கள், அவரவர் புரிந்து கொண்டதற்கேற்ப, மற்றவர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள். எங்களுக்கு அவற்றைக் குறித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது, நாங்கள் இந்தப் பணிமனையில் கற்றுக்கொண்ட பாடங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அவ்வாறு பார்க்கையில் பெரும்பாலான நிபுணர்கள், நாங்கள் இங்கு கற்றறிந்த ஒரு சில முக்கியமான கருத்துக்கள் குறித்து எதுவும் சொல்வதில்லை. உதாரணமாக, மேன்மையான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் நெறிமுறைகள், உணவு செரிமானத்தில் உயிராற்றலின் பங்கு, உணவு ஆற்றலைத் தருவதில்லை என்பதற்கான விளக்கம், ஆரோக்கியத்தை மேம்படுத்த உபவாசம் இருக்கும் வழிகள், போன்ற கருத்துக்களை மிகவும் விளக்கமாக மற்ற வல்லுனர்கள் பேசியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. 

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக நோய் மற்றும் உணவு குறித்த அறியாமையிலும், உயிர் குறித்த அச்சத்திலும் மூழ்கி இருந்தோம். அந்நோய்களிலிருந்து முழுமையாக விடுபடவும், ஆரோக்கியம் தரும் உணவு எது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், தொடர்ச்சியானத் தேடலில் ஈடுபட்டிருந்தோம். அப்படிப்பட்ட சூழலில்தான், இந்தப் பணிமனை குறித்த முழுத்தகவலும் தெரியாமல், இங்கு சென்றால் ஒவ்வொரு விதமான நோய்க்கும் எப்படி நமக்குநாமே மருத்துவம் செய்து கொள்வது என்பதை மட்டும் கற்றுத்தருவார்கள் போலும் என்று நினைத்து, இதில் பங்கேற்றோம். ஆனால், இங்கு வந்த பின்னர் ஏழுநாட்கள் பணிமனையில் தங்கி, இயற்கை உணவுகளை உண்டு, சிகிச்சை முறைகளையும், இயற்கை வாழ்வியல் குறித்த பாடங்களையும் முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு, நாங்கள் அதுவரைத் தேடிக்கொண்டிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைத்தது. அதனால்தான், இங்கு நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களும், பின்பற்றும் வழி முறைகளும் முற்றிலும் சரியானதே என மனமார ஒப்புக் கொள்ள முடிந்தது. நாங்கள் இங்கு கற்றறிந்த உண்மைகளை எங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்த்து அவர்களையும் பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். ஆனால் வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை மட்டும் படித்துவிட்டு, அவை அனைத்தையும் நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு, முழுமையாகப் பின்பற்றுவது என்பது சந்தேகம் தான். குறைந்தபட்சம், இந்தக் கட்டுரைகள், உங்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கை வாழ்வியல் குறித்து மேலும் கற்றுக் கொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டினாலே போதுமானது. அப்படி ஆர்வம் உள்ளவர்களுக்கு, நாங்கள் பரிந்துரைப்பது இதுதான். இந்த வலைப்பூவில் வெளியாகி வரும் கட்டுரைகளை வாசியுங்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள புத்தகங்களைப் படியுங்கள். அதன் பிறகு உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். பின்னர், இதேத் துறையில் இருக்கும் மற்ற வல்லுனர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா கருத்துக்கள் குறித்தும் நன்கு ஆராய்ந்து சிந்தியுங்கள். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.’  - 

எனும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப எது உண்மை என்பதைத் தெரிந்து கொண்டு, உங்கள் மனம் எதை சரியென்று தேர்வு செய்கிறதோ, அந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள். 

4 comments :

  1. Good awareness to Society...
    We had been spent lot which may cause to illness;
    now stop this.. and start to progress our health in a natural way..

    ReplyDelete
    Replies
    1. You are right..Our body itself functions as a doctor whenever we fall sick. If we understand our body and its language then we do not have to depend on anyone.

      Delete
  2. ஐயா தங்களது அலைபேசி எண் தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா . இங்கு உள்ள அனைத்து பக்கங்களிலும் வலது அடிப்பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் உள்ள chat icon பயன்படுத்தி எங்களின் தொடர்பை பெறலாம்.

      Delete